ஆற்று படுகையிலே ஆடும் பெண்ணின நாணல் ஒன்று
மன்னன் வருகைக்கென நாளும் மண்ணுக்குள் வேர்கள் கொண்டு
கடும் வெள்ளம் வந்திடினும் அவன் உருவம் கண்ணில் கொண்டு
வாழ்ந்து வந்ததென்ன ஆதவன் அனலில் வெந்ததென்ன
புரவிக் கூட்டம் வந்திடுங்கால் கொஞ்சம் வளைந்து பார்த்திடுமே
தன்னவன் உருவம் இல்லை என்று நெஞ்சம் வெதும்பி தேய்ந்திடுமே
வழி பார்த்து நின்றதிலே கண்கள் பூத்தும் இமைத்ததில்லை
இதுநாள் நின்றது நடைபிணமாய் இவள் கொண்டது பெரும் தவமாய்
காற்றென மன்னன் வந்தான் இவள் கூட்டினுள் சுவாசம் தந்தான்
பெற்றது பேர்கள் என்றாள் அவனை கண்டதே வரங்கள் என்றாள்
கன்னங்கள் தீண்டிய அவன் கரங்களால் பேச்சிழந்தாள்
கட்டி அனைதத்தினால் அடைந்தேன் வீடு பேற்றை என்றாள்
வந்தது அழைப்பு என்றான் காதல்காரியம் கிடப்பில் என்றான்
அவன் புரவி நடத்தி செல்ல இவள் பிரிவில் உயிர் துடித்தாள்
முன்னம் நின்ற நடைபிணம் ஏன் பின்னம் சாய்ந்தது குற்றுயிராய்-மீண்டும்
நாணலாய் நின்றிடலோ இல்லை ஆற்றிலே கரைந்திடலோ - என்று
கேட்கவே துணிவும் இல்லை அவன் இல்லையேல் உலகம் இல்லை
என நின்றனள் கரை நாணலாய் - உள்ளம் ஏங்கிடும் தனி நிலவாய் !!!