Saturday, July 30, 2011

வெறுப்பின் நுனியில்

வெறுப்பின் நுனியில்
இரு இதயங்கள் நிற்க

வாழ்ந்திருந்த நொடியும்
பிரிந்திருக்கும் வலியும்
வாளென பாய்ந்து 
குருதியை  குடையும் 

காத்திருந்த நேரம்
கண்டிருந்த சுகமும் 
மறுவார்த்தை இன்றி 
விடைகொடுத்த தருணம் 

அலை ஓய்ந்த கரையில் 
புயல் ஓய்ந்த நிலையின்
வெறிச்சோடி விளங்கும்  
சோகத்தை நிகர்க்கும் 

வற்றிய குளத்தில்
தவிக்கின்ற மீனின்
துடிப்பினை போல
விழிகளும் வெறிக்கும் 

வாழ்கின்ற நிலையில்
எரிகின்ற மெழுகின்
நிலையென இரண்டு
உயிர்களின் அருகில்
வெறுப்பது நிற்கும்

நோய் கொண்ட ஜீவன்
வலியினை குறைக்கும்  
கருணை கொலையை
நாடிடும் இதயம் !!!




Wednesday, January 19, 2011

வழிகளும்   திரும்பி - உனை
நோக்கிடும் இதயம்-மதி
மயங்கிய நிலையில்  -செயல்
இழந்திட்ட பின்பும் 
மனதினில் சுமையாய்- இந்த
காதலும் ஏனோ-உனை
நீங்கிய நேரம் - உயிர்
பிரிந்திடும்  போதும்
வியத்தகு நிலையாய்
வாழ்கிறேன் நானும்

சுமையென தாங்கும்
பிரிவதன்  தாக்கம் 
உலகத்தின்  கதவில் 
இருள் நின்ற நேரம் 
பறவைகள்  கூட்டம்
பறந்திடும் தோற்றம்
திருவிழா கூட்டம்
வடிந்திட்ட போதும்
வெறிச்சோடி போகும்
கடைவீதி  வானம் 

விடியலின் கரையில்
சூரியன்  வரவில்
தாமரை  மலரை
தங்கிடும்  குளமாய்
கண்களில்  மழை நீர்
தேங்கிடல்  ஏனோ
தலைவனை  காண
ஏங்கிடல்  ஏனோ 
தலையணை  நனைந்து
நீண்டிடும்  இரவில்
சுடுநீரில்  இட்ட
மீன் போலே நானும்
பாதங்கள் வெறுத்த
சலங்கைகள்  எனவே 
ஜாதிகளின் அலையில்
கரைந்திடல்   தானோ!!!   

Saturday, July 24, 2010

பௌர்ணமியின்  நிலவொன்று - என் 
இரவினிலே  வந்ததன்று  !
கை  கொண்ட கருமேகம்  - அதன் 
முகம் தடவி  கதை பேசும் 
முழு நிலவின் முகம் பார்த்து 
மோகனங்கள்  பாடி வரும் 
பால் நிலவு தனை மறந்து 
தோள்களிலே  சாய்ந்து விழ 
 இரவெல்லாம்  இன்பமென 
காற்றெல்லாம் காதல்சொல்ல- என     
எனைக்கொல்லும்   வெண்ணிலவும் 
உன்விழி தோன்றா  விடை என்ன  ?

காணாமல்  கரைந்திருந்தேன்-உயிர்
போகாமல்  வாழ்ந்திருந்தேன்
பதில்  என்ன  வெண்ணிலாவே  - என்
வேதனைகள்  உணர்த்திடாயோ
விழியெல்லாம்    நீர்குளமாய்
மனமெல்லாம்   புயல்மழையாய் 
மலர்மாலை தொடுத்து வைத்தேன்
மன்னவனை  தேடிவந்தேன் 
மெய்சொல்வாய் வெண்ணிலாவே 
தலைவனை நீ கண்டதுண்டோ  !

நீ மட்டும்  நிதம்  நிதமும் 
காதலிலே  உலவி வர 
காற்றெல்லாம் காதல்சொல்ல
எனைக்கொல்லும் வெண்ணிலவே 
என் சோகம் உணர்ந்திடாயோ !!!

Monday, May 3, 2010

காதல்

தனிமைகள்  அடர்ந்த 
தாமரைக் குளத்தில் 
தனியாய்  பிறந்து 
இதழ்கள் மலர்ந்த 
மலராய் வளர்ந்து 
மனதில் நிறைந்து
கண்கள்  மயக்கும் 
மாயமாய்  காதல்

மழையின்  பரப்பில் 
நிழலை  சூட்டி-விரல் 
தடவி  செல்லும் -வெண் 
முகிலின்  சுவடாய்
உயிரை  வருடி 
இதயம்  நெருடி 
உலவும்  நினைவில் 
உலகம்  மறக்கும் 

இயல்பாய்  புரிந்து 
நேர்த்தியாய் குழப்பும் 
சிலந்தியின்  வலையில் 
சிக்கிய தவிப்பில் 
தேனின் சுவையை
சுவைத்திட  வைக்கும் 
விழிகளின்  நுனியில் 
வானவில்  தோன்றும் 

இன்பத்தின்   துன்பமாய் 
துன்பத்தின்  இன்பமாய் 
முட்களின்  தோன்றிய 
மலரென  வளர்ந்து
மனதினில்   நிறைந்து
கண்களை  மயக்கும்
மாயமே   காதல் !!!

Thursday, March 18, 2010

அலைமோதி சரிகின்ற கரையில்

அலைமோதி சரிகின்ற  கரையில்  
அசையாமல்  அருகில் இருந்தோம்
மனதோடு  மயங்கிய  நிலையில்
விழியோடு  உறவுகள்  கொண்டோம்  
விளங்காமல்  வியந்திடும்  கடல்நீர்
தன்  ஈரத்தை  இதயத்தில்  சேர்க்கும்  

இமைக்காமல்  பார்த்திட்ட  விழிகள் 
சளைக்காமல்  பேசிய   உதடும்
வளையோசை  சிணுங்கல்கள் - யாவும் 
காதோரம்  உன் ரகசியம்  பேசும் 
மனதோரம்  மெல்ல நகர்ந்து 
எண்ணத்தின்  வண்ணங்கள்  சொல்லும் 

உலகெல்லாம்  நிசப்தமாய்  ஆகி  -உன் 
குரல் மட்டும்  ஒலித்திட  கேட்கும்   
அசைகின்ற  பொருள்கள்  அனைத்தும் 
அசையாமல்  என்னையே நோக்கும் 
போகின்ற  பாதைகள்  எல்லாம் 
மலர்பூத்து  மணம்வீசி   போகும் 

அறைக்குள்ளே  அடைபட்ட கிளிகள் 
தன்  எண்ணம்போல்  வானத்தில்  திரியும்
நிலை என்றே  நெஞ்சம்  நெகிழ்ந்து  
மனதோடு  மயங்கிய  நிலையில் 
அலைமோதி சரிகின்ற கரையில்
அசையாமல் அருகில் இருந்தோம் !!!

Thursday, February 18, 2010

தலைவி

கதிரவன்  கிரணங்கள்  இமையென ஆகி-அவள் 
விழிகளாய்  அவனிடம்  கண்சிமிட்டி  போகும் 

ஊடலின்  செயற்கை  காதலின் இயற்கை 
காண்பது  எல்லாம் அவள் பிம்பத்தில்  முடிக்கும்

மலை கடல்  ஓடி  கானகம் நாடி 
கரு வண்டு  இனமிது  மலர் தனை  தேடும் 

காற்றின்  கைகளால் கிழித்திட்ட நுரைகள் 
கூட்டமாய் நின்று  இகழ்ந்துரையாடும் 

பித்தனாய் போன  மனுடன்  ஒருவன் 
மிச்சமாய் உணர்ந்த மெய்பொருள்  எனவே 

எத்தனை  முறைதான் தனை  பிரிந்தாலும் 
நித்தமும் மனமது  அவளையே  தேடும்

மருதத்தின் வனப்பில்  மயங்கிய வானம் -என
அவள் மீது கிரங்கி  கால் நடை போடும்   

உறங்காமல்  நீந்தும்  மீனத்தின்  கூட்டம் - இவன்   
இமைசேரா   இரவின் நீளத்தை  உரைக்கும்

பார்த்ததும்  பட்டதும்  சுட்டதும்  எனவே
விட்டிலாய் விழுந்தேன்  ஒளியென  நினைத்தே

கூடலாய்  ஊடலாய்    இனித்திடும்  வலியோ  - அவள் 
பெண்மையின்  இனமெனும்  செந்தழல் குணமோ !!!

Saturday, February 6, 2010

விழி  இழந்த  மனம் ஒன்று 
குரல்  செவியே  புலம் என்று 
விளையாட மனம் கொண்டு
குரல் கொண்ட  உன்னுடனே 
நடை போட்டு  வரும் வேளை 
நிகழ்கால  நிஜங்கள்  எல்லாம்-உன் 
குரலாகி  நிழல்  காட்ட 
நிறமரியா என் மனமும் 
குரலதிர்வில்  நிறம் சேர்த்து 
இன்பமென  துன்பமென 
கோபமென  தாபமென -புது
வர்ணங்கள் உணர்ந்து வரும்  

விளையாடும்    வேளையிலே - கால்  
இடறி விழும்  தருணத்திலே  - நீ  
குரலெழுப்பி  கூப்பிடாமல்  
வலியென்றே உணர்த்திடாமல்  
விழியில்லா   செவி மட்டும்  
புலமென்றே  கொண்ட  மனம்  
புரியாமல்  உன்னிடத்தில்  
வழக்கமென  விளையாடும் -  தன் 
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே  தோள்சாயும் - பின்
வலியென்று வேதனையாய்- எனை 
வெருப்பென்றே நீ நோக்க 
விளங்காமல்  பேதை மனம் 
வழக்கமென விளையாடும்   

பதிலொன்றும்  கூறாமல்  
பழகியதே  பாவமென்று  
எனை விடுத்து  நீ போக
கால்  தடத்தின்  ஓசைதனை - உன்  
விளையாட்டின்  முறை எனவே    
ஓசை  நின்ற  நேரம்  பார்த்து 
விழி இல்லா  பேதை  மனம் -தன் 
விளையாட்டை  துவங்கிவிடும்
நீ இல்ல  நிலையதனை  
துளி கூட  உணராமல்  
விழி இல்லா  பேதை மனம்  
வழக்கமென  விளையாடும்  - தன்
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே தோல்  தேடும்   !!!