அலைமோதி சரிகின்ற கரையில்
அசையாமல் அருகில் இருந்தோம்
மனதோடு மயங்கிய நிலையில்
விழியோடு உறவுகள் கொண்டோம்
விளங்காமல் வியந்திடும் கடல்நீர்
தன் ஈரத்தை இதயத்தில் சேர்க்கும்
இமைக்காமல் பார்த்திட்ட விழிகள்
சளைக்காமல் பேசிய உதடும்
வளையோசை சிணுங்கல்கள் - யாவும்
காதோரம் உன் ரகசியம் பேசும்
மனதோரம் மெல்ல நகர்ந்து
எண்ணத்தின் வண்ணங்கள் சொல்லும்
உலகெல்லாம் நிசப்தமாய் ஆகி -உன்
குரல் மட்டும் ஒலித்திட கேட்கும்
அசைகின்ற பொருள்கள் அனைத்தும்
அசையாமல் என்னையே நோக்கும்
போகின்ற பாதைகள் எல்லாம்
மலர்பூத்து மணம்வீசி போகும்
அறைக்குள்ளே அடைபட்ட கிளிகள்
தன் எண்ணம்போல் வானத்தில் திரியும்
நிலை என்றே நெஞ்சம் நெகிழ்ந்து
மனதோடு மயங்கிய நிலையில்
அலைமோதி சரிகின்ற கரையில்
அசையாமல் அருகில் இருந்தோம் !!!