கதிரவன் கிரணங்கள் இமையென ஆகி-அவள்
விழிகளாய் அவனிடம் கண்சிமிட்டி போகும்
ஊடலின் செயற்கை காதலின் இயற்கை
காண்பது எல்லாம் அவள் பிம்பத்தில் முடிக்கும்
மலை கடல் ஓடி கானகம் நாடி
கரு வண்டு இனமிது மலர் தனை தேடும்
காற்றின் கைகளால் கிழித்திட்ட நுரைகள்
கூட்டமாய் நின்று இகழ்ந்துரையாடும்
பித்தனாய் போன மனுடன் ஒருவன்
மிச்சமாய் உணர்ந்த மெய்பொருள் எனவே
எத்தனை முறைதான் தனை பிரிந்தாலும்
நித்தமும் மனமது அவளையே தேடும்
மருதத்தின் வனப்பில் மயங்கிய வானம் -என
அவள் மீது கிரங்கி கால் நடை போடும்
உறங்காமல் நீந்தும் மீனத்தின் கூட்டம் - இவன்
இமைசேரா இரவின் நீளத்தை உரைக்கும்
பார்த்ததும் பட்டதும் சுட்டதும் எனவே
விட்டிலாய் விழுந்தேன் ஒளியென நினைத்தே
கூடலாய் ஊடலாய் இனித்திடும் வலியோ - அவள்
பெண்மையின் இனமெனும் செந்தழல் குணமோ !!!