Saturday, February 6, 2010

விழி  இழந்த  மனம் ஒன்று 
குரல்  செவியே  புலம் என்று 
விளையாட மனம் கொண்டு
குரல் கொண்ட  உன்னுடனே 
நடை போட்டு  வரும் வேளை 
நிகழ்கால  நிஜங்கள்  எல்லாம்-உன் 
குரலாகி  நிழல்  காட்ட 
நிறமரியா என் மனமும் 
குரலதிர்வில்  நிறம் சேர்த்து 
இன்பமென  துன்பமென 
கோபமென  தாபமென -புது
வர்ணங்கள் உணர்ந்து வரும்  

விளையாடும்    வேளையிலே - கால்  
இடறி விழும்  தருணத்திலே  - நீ  
குரலெழுப்பி  கூப்பிடாமல்  
வலியென்றே உணர்த்திடாமல்  
விழியில்லா   செவி மட்டும்  
புலமென்றே  கொண்ட  மனம்  
புரியாமல்  உன்னிடத்தில்  
வழக்கமென  விளையாடும் -  தன் 
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே  தோள்சாயும் - பின்
வலியென்று வேதனையாய்- எனை 
வெருப்பென்றே நீ நோக்க 
விளங்காமல்  பேதை மனம் 
வழக்கமென விளையாடும்   

பதிலொன்றும்  கூறாமல்  
பழகியதே  பாவமென்று  
எனை விடுத்து  நீ போக
கால்  தடத்தின்  ஓசைதனை - உன்  
விளையாட்டின்  முறை எனவே    
ஓசை  நின்ற  நேரம்  பார்த்து 
விழி இல்லா  பேதை  மனம் -தன் 
விளையாட்டை  துவங்கிவிடும்
நீ இல்ல  நிலையதனை  
துளி கூட  உணராமல்  
விழி இல்லா  பேதை மனம்  
வழக்கமென  விளையாடும்  - தன்
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே தோல்  தேடும்   !!!