வானமாய் நீயும்
நிலவென நானும்
அன்பாய் பொழிந்து
ஒளியாய் சிரித்து - உன்
துன்பத்தில் தேய்ந்து - பின்
இன்பத்தில் வளர்ந்து
நீ கோபிக்கும் வேளை
கொடும் இருளிடத்தில் புதைந்து - என
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!
கார்மேகம் சிலநேரம்
மறைத்திட நேரும்- அதில்
தன்னிறமும் இருட்டெனவே
மாறிடல் கூடும்
புயலான குளிர்க்கற்றில் - நான்
உறைந்திட்ட நேரம்- பகல்
சூரியன் தன் ஒளிதனிலே
விழுங்கிட்ட போதும்
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!
உருகிய அன்பை
மருகிய விழியை
அருகினில் நின்று
மயங்கிய நினைவை
மறந்திடல் ஏனோ
நெருப்பின் உருவாய்
வெறுப்பின் பொருளாய் - நான்
தோன்றிடும் போதும்
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!
நீ சுட்டியதிசையில்
பயணித்து வந்த
பண்பட்டு பழகா
சிந்தனைக் கருவி
கொன்றிடும் தூரம்
நீ சென்றிட்ட போதும்
தன் செயல்தனை இழந்து
உன் நினைவினில் வாடும் - இது
உன்னுடனே என்றென்றும்
உலவிய நிலவு!
உனக்கெனவே காத்திருக்கும்
அழகிய நிலவு
முகில்மழையில் முழ்கி தினம்
கரைந்திடும் நிலவு
காற்றெல்லாம் உன் வாசம்
உணர்ந்திடும் நிலவு
உனக்கெனவே காத்திருக்கும்
அழகிய நிலவு - இது
உன்னுடனே என்றென்றும்
உலவிடும் நிலவு!!!!