Friday, August 28, 2009

கண்ணன் சிறு பிள்ளை

ஆக்கி வைத்த உலகமெல்லாம்

துன்பமின்றி கண்ணுறங்க

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

நிலா துண்டு மண் வந்து

முதல் பல்லென்று தோன்றியதோ!

வண்ண மயில் ஆடி வந்து

அடியெடுத்து பழக்கியதோ !

வான் நிறத்தை தான் சேர்த்து

பிள்ளையென்று வந்ததிங்கே-

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

காளிங்கன் தலை நடுவே

நர்த்தனங்கள் ஆடி நின்றான்

மாயைகள் செய்து தினம்

புண் சிரிப்பாய் பூத்திடுவான்

வெண்ணெய் உண்டு மண்ணையுண்டு

வேடிக்கை காட்டிடுவான்-

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

பசுக்களுடன் இளங்கன்றாய்

துள்ளி வந்து ஆடிடுவான் !

மலையதனை குடை எனவே

தூக்கி நின்ற கள்வனவன் !

கோகுலத்தின் அன்னையர்க்கு

முதற்பிள்ளை அவனாவன் -

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

மலர்கின்ற மலரெல்லாம் அவன்

பாதம் சேர தவமிருக்கும்

யசோதையின் மைந்தனென்று

கோகுலத்தில் வந்து நின்றான்

வாசு தேவன் பால கிருஷ்ணன்

மதுசூதன கோபாலன் -

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

இடைக்குலத்து வேந்தனவன்

குறும்பு பல செய்திடுவான்

செல்லமென கில்லிடுவார்

கன்னங்கள் நொந்திடுமோ

மணல்தனிலே ஓடியதால்

சிவந்திடுமோ சிறு கால்கள் -

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான்

யமுனை நதி கரைதனிலே

நதியலையின் தாலாட்டில்

தேன் குழலிசை இனிமையிலே

வெண் பட்டின் மென்மையிலே

தென்றவள் தலை கோத

தாயவளின் மடி தனிலே -

காக்கின்ற பிள்ளையவன்

களைப்புடனே கண்ணயர்ந்தான் !!!