வேற்றொரு மொழியை விலை தந்து வாங்கி
தாய்மொழி மறந்து தன்னிலை இழந்து
தடுமாறி நிற்கும் கான்வெண்டு பிள்ளாய் !
சங்கங்கள் வைத்து தமிழ் தந்த நாட்டில்-தமிழ்
கற்றலும் இழுக்காய் என்னிட வைப்பார்
பொய்யில் புலவன் உரைத்திட்ட குறளை
ஆங்கிலம் பெயர்த்தால் அறிந்திட முயல்வார்
பாட்டனும் பூட்டனும் பயனின்றி போக
சித்தியும் மாமியும் வழக்கின்றி நீங்க
தாய் தந்தை உறவே அன்னியமாக
டாடியில் சென்று மம்மியில் சுருங்க
சித்தப்பன் பெரியப்பன் பெயரொன்றும் இல்லை
ஆன்ட்டியாய் அன்கிலாய் பொதுமொழி உரைப்பார்
நோக்கிலா அம்பெதும் இலக்கினை அடையா !
மொழியிலா சிந்தனை கருத்தினை உணர்த்தா !
தமிழியல் கலவா தொடர்பியல் எதுவும்
நிலையிலா அலைதனில் நீந்திடும் தெப்பம்
செந்தமிழ் ஒன்றே செயற்கிலா செல்வம்
என்பதை உணராய் கான்வெண்டு பிள்ளாய் !