Tuesday, December 1, 2009

விடிவெள்ளி

நீயில்லா நாளில்

நிலவில்லா வெளியில்

வெறித்திருந்த வானம்

தனித்திருந்த நானும்

மீனில்லா விண்ணில்

ஒளியில்லா இரவில்

இதழினை இழந்த

மலரொன்று தனியே

செடிதனில் நிற்கும்

நிலையென்று ஆனேன்

காட்சியின் பிழையாய்

நீ கண்களில் தோன்ற

நிறமில்லா உலகில்

நிலையின்றி வாழும்

நிஜமில்லா பொருளின்

நிழலென்று ஆனேன்

மழை தொடர்ந்த வெயிலில்

மனம்போல முளைத்து

வெண்மையாய் சிரிக்கும்

மென்மையாய் வளர்ந்த

மழைகாளான் அதுவும்

நீ புன்னகைத்து பேசும்

பொருளில்லா மொழிக்கும்

புலவர்கள் எழுதா

புது அர்த்தங்கள் உணர்த்தும்

தங்கத்தில் இழைத்த

தவறின்றி செய்த

பதுமைக்கே ஒப்பும்

பொக்கிஷ பெண்ணே-என்

விடிவெள்ளி நீயே !